கட்டுரை

மு.க.ஸ்டாலின் வெற்றி முகம்!

மதிமலர்

பாஜக கூட்டணியில் இருந்து 2004 - ல் கடைசி நேரத்தில் வெளியே வந்திருந்த திமுக, தமிழ்நாட்டில் காங்கிரஸ் உள்ளிட்ட ஆறு கட்சிகள் இணைந்த ஒரு கூட்டணியைக் கட்டியது. அதிமுக தனித்துவிடப்பட்டது. வேறு வழி இல்லாமல் பாஜகவை ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார். திமுக கூட்டணி தமிழ்நாடு& புதுச்சேரியில் ‘க்ளீன் ஸ்வீப்!' அந்தத் தேர்தலில் இங்கிருந்து கிடைத்த 40 இடங்கள் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைக்க முக்கிய உதவியாக இருந்தன!

அப்போது கலைஞர் கருணாநிதி இருந்தார்! அவரால் இடதுசாரிகள், மதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட ஒரு கூட்டணியை அமைக்க முடிந்தது! அதன் பின்னர் இரு தேர்தல்கள் கழித்து இதுபோன்ற ஒரு வானவில் கூட்டணி தமிழ்நாட்டில் அமையமுடியாமல் போனது! இப்போது அதேபோன்றதொரு கூட்டணியை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமைத்துக்காட்டி வெற்றிக்கனியைப் பறித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்!

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னால் தொடர்ந்து தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தன்னை முன்னிலைப்படுத்தி செய்துவந்த பிரசார இயக்கத்துக்குக் கிடைத்த பரிசாகத்தான் இந்த வெற்றியைப் பார்க்கவேண்டும்! அப்போது மோடியின் நாடாளுமன்ற வெற்றிக்கு உதவிய நிபுணர் குழுவின் ஆலோசனையுடன் ஸ்டாலின் அணுகுமுறை அமைந்தது! நமக்கு நாமே என்று தமிழகம் முழுக்க அவர் மேற்கொண்ட பயணங்கள், மாலை நேரங்களில் முன்கூட்டியே மேடை போட்டுப் பேசி பொதுக்கூட்டங்களை பாந்தமாக முடிப்பது என புதிய அணுகுமுறையில் அவை அமைந்தன. ஆனாலும் 2016  சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிடம் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது திமுக! அந்த சட்டமன்றத் தேர்தலில் கலைஞரின் வழிகாட்டுதலும் இருந்தது.

ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு மு.க. ஸ்டாலினின் தலைமைத்துவத்துக்கு வந்த முதல் தேர்விலேயே அவர் வென்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்! தந்தையின் பாணியிலேயே பெரிய கூட்டணியைக் கட்டினார்! காங்கிரசுடன் புதுடெல்லியில் கனிமொழியை பேச்சுவார்த்தை நடத்த அனுமதித்து பத்து இடங்களைக் கொஞ்சம் தாராளமாகவே கொடுத்தார். இந்த தாராளம் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் அளவுக்கு நீண்டது!

சட்டமன்றத் தேர்தலின்போது ம.ந.கூட்டணி அமைத்து, திமுகவை தோற்கடித்தவர்களையும் அரவணைத்தார்! மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை ஒரு இடத்துக்கு சம்மதிக்க வைத்ததுடன் அவருக்கு ராஜ்யசபாவில் இடம் என்று ஏற்க வைத்தார். இடதுசாரிகளுடனான பேச்சுவார்த்தை சுமுகமாகப் போனது. அத்துடன் விசிகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை முறுக்கினாலும் ரவிக்குமாரை மட்டும் உதயசூரியனில் போட்டியிடவைக்கும் சமரசத்துடன் முடிவடைந்தது. தேமுதிகவின் பேர அரசியலுக்கு மறுப்பு சொன்னதுடன், பாமக, அதிமுக பக்கம் போவதை அமைதியாக அனுமதித்தது என ஸ்டாலின் கணக்கில்
 நட்சத்திரங்கள் கூடுகின்றன.

இந்த வெற்றிக்கு முக்கியப் பின்பலமாக அமைந்தது தொடர்ச்சியாக செய்யப்பட்ட பாஜக எதிர்ப்புப் பிரசாரங்கள்தான்! அதற்கு ஏற்றார்ப்போல் மத்திய அரசு ஆதரவுடன் உள்ளே வந்த சுற்றுச்சூழல் மற்றும் நீட் போன்ற பிரச்னைகள் மக்களின் மனநிலையை மாற்றி கூடுமானவரை சிந்தாமல்
 சிதறாமல் வாக்குகளாக மாறின.

"மேற்குவங்கத்தில் இன்று இருக்கும் நிலைமையைப் பார்த்தால் இடதுசாரிகளின் கட்டுப்பாட்டில் பல ஆண்டுகள் அம்மாநிலம் இருந்ததா என்று நம்பவே முடியாத நிலை உள்ளது. அந்த அளவுக்கு பாஜக அம்மாநிலத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் திமுக மட்டுமே அந்நிலை வராமல் பார்த்துக்கொண்டுள்ளது. அதற்கான பெருமை ஸ்டாலினுக்கே போய்ச் சேரவேண்டும். அகில இந்திய அளவில் இடதுசாரிகளையும் வலது&மத்தி
சார்பு எடுக்கும் காங்கிரஸையும் ஒரே கூட்டணிக்குள் வைக்கும் உத்திதான் தேவைப்படுகிறது. அதுமட்டுமே வலதுசாரிக் கட்சியான பாஜகவை கட்டுக்குள் வைக்கும். அதைச் செய்து இந்தியாவுக்கு எதிர்கால அணுகுமுறைக்கு வழி காட்டியிருக்கிறார் ஸ்டாலின். இதன் மூலம் அவர் தன் தலைமைக்கு வைக்கப்பட்ட தேர்வான இந்தத் தேர்தலில் முழு மதிப்பெண் பெற்றுள்ளார்!''என்கிறார், திராவிட ஆய்வாளரான சுப. குணராஜன்.

ஸ்டாலின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் வாரிசுகளை இத்தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறக்கியது விமர்சிக்கப்பட்டது. ஆனால் இது தலைவராக அவர் எதிர்கொள்ளும் முதல் தேர்தல் என்பதால் எல்லோரையும் அரவணைக்கும் முயற்சியாக இருக்கலாம். ஆனால் இறுதியில் வெற்றி ஒன்றுதான் பேசும் என்பதால், இனி இதுவும் பேசப்படப் போவது இல்லை!

அதிமுக ஆட்சியை வம்படியாகக் கவிழ்த்துக் கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்கப்போவது இல்லை என்று இதுவரை ஒரு சமநிலையான அணுகுமுறையை அவர் பின்பற்றி வந்திருக்கிறார்! இந்தத் தேர்தலில் 22 சட்டமன்றத் தொகுதிகளில் முழுமையான வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது! இது
சறுக்கலே. ஆனால் கையில் கிடைத்திருக்கும் இந்த வெற்றியைக் கொண்டு அவர் எப்படி அரசியல் களத்தில் ஆடப்போகிறார் என்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்!

ஜுன், 2019.